உப்பு சப்பு இல்லாத ஆளுநர் உரை: முத்தரசன் விமர்சனம்

 

உப்பு சப்பு இல்லாத ஆளுநர் உரை: முத்தரசன் விமர்சனம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை உப்பு சப்பு இல்லாத உரை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை உப்பு சப்பு இல்லாத உரை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தை தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றியுள்ளார். மாநில நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ள மத்திய அரசின் வஞ்சனைப் போக்கை வெளிப்படையாகக் கூறத் தயங்கும் ஆளுநர் உரை பொருள்கள் மற்றும் சேவை வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட நிதியிழப்பை சரிகட்ட மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ 7 ஆயிரத்து 889 கோடியை வழங்குமாறு கெஞ்சிக் கண்ணீர் வடிக்கிறது.

உதய் மின்திட்டம், 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை செயல்படுத்தியதால் கழுத்தை முறிக்கும் நிதிச் சுமைக் கூடிவிட்டதாக கூக்குரல் எழுப்புகிறது. மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக போர் குரல் எழுப்ப வேண்டிய ஆளுநர் உரை அஞ்சி நடுங்கி முனுமுணுக்கிறது. கஜா புயலின் தாக்குதலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இதில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். 

நான்கு மாவட்டங்களையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது. முதல்கட்ட மதிப்பீட்டின்படி மாநில அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை.

லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதியில் நிற்கிறார்கள். வீடுகளை சீரமைக்க அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியும், விவசாயப் பேரழிவை புனரமைக்க அறிவிக்கப்பட்ட நிதியும் போதுமானதல்ல, உயர்த்தபட வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆளுநர் உரை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை; தொழிலாளர் துறையில் முத்தரப்பு அமைப்புகளை சீர்குலைத்து வாரிய செயல்பாடுகள் முடக்கி போடப்பட்டுள்ளன. இவைகள் குறித்து ஆளுநர் உரை கவலைப்படவில்லை. மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உயர்மின் அழுத்தப்பாதைக்காக மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு,  நிலத்துக்கு அடியில் மின்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தை ஆளுநர் உரை கண்டு கொள்ளவில்லை.

அரசு பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் என பலதுறைப் பணியாளர்களின் போராட்டங்கள் குறித்தும் கவலைப்படவில்லை.விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார அடித்தளமாக விளங்கும் பட்டாசுத் தொழில் சந்திக்கும் நெருக்கடி குறித்தும், பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறு,குறு தொழில்களுக்கு புத்துயிர் கொடுப்பது குறித்தும் ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆளுநர் உரை மக்களின் உணர்வை பிரதிபலிக்காத, ஷஉப்பு சப்பு இல்லாத| வெற்று உரையாகவே அமைந்துள்ளது என கூறியுள்ளார்.