உத்தர பிரதேசம் மட்டுமல்ல மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களும் சொந்த காசில் வருமான வரி கட்டி பழக்கமில்லை

 

உத்தர பிரதேசம் மட்டுமல்ல மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களும் சொந்த காசில் வருமான வரி கட்டி பழக்கமில்லை

உத்தர பிரதேசம் மாநிலம் மட்டுமல்ல மத்திய பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியை அம்மாநில கருவூலம் மக்களின் வரிப்பணத்தை எடுத்து செலுத்தி வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச முதல்வராக வி.பி.சிங் இருந்த போது, உத்தர பிரதேச அமைச்சர்கள் சம்பளம், அலவன்ஸ் மற்றும் இதர செலவினங்கள் சட்டம் 1981 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏழைகளாக கருதப்படுவர், அவர்களால் தங்களது வருமானத்திலிருந்து வருமான வரி செலுத்த முடியாது. அதனால் மாநில கருவூலமே அவர்கள் சார்பாக மக்களின் வரிப் பணத்திலிருந்து எடுத்து வருமான வரியை செலுத்தி விடும்.

யோகி ஆதித்யநாத்

சுமார் 38 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தின் எந்தவொரு முதல்வரும், அமைச்சர்களும் இதுவரை தங்களது சொந்த காசில் வருமான வரியை செலுத்தியது இல்லை. கருவூலமே அரசு கஜானாவிலிருந்து அவர்களின் வருமான வரியை செலுத்தி வந்த தகவல் கடந்த வாரம் வெளியே தெரிந்தது. இதனையடுத்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த சட்டத்தை நீக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

உத்தர பிரதேசத்தில் மட்டுமல்ல மேலும் 5 மாநிலங்களில் இது போன்ற சம்பவம் இன்னும் அரங்கேறிதான் வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அரியானா, இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலும் எந்தவொரு முதல்வரும், அமைச்சர்களும் இதுவரை தங்களது சொந்த காசில் வருமான வரியை செலுத்தியதில்லை. அம்மாநிலங்களின் கருவூலமே முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியை செலுத்தி வருகிறது.

கேப்டன் அமரீந்தர் சிங்

2018 மார்ச் 18ம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்காக மாநில கருவூலமே வருமான வரியை செலுத்தி வந்தது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கிழக்கு பஞ்சாப் அமைச்சர்கள் சம்பளம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களும் தங்களது வருமான வரியை அவர்களது காசில் செலுத்தி வருகின்றனர்.

உத்தராகாண்டில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமல்ல சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் வருமான வரியை கூட அம்மாநில கருவூலம்தான் 2000 நவம்பர் 9ம் தேதி முதல் செலுத்தி வருகிறது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக உத்தரகாண்ட் முதல்வர் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

1994 ஏப்ரல் 1ம் தேதி முதல் மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியை அரசு கருவூலமே செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 1966 முதல் இந்த நடைமுறை உள்ளது.