உத்தர பிரதேசத்தில் 150 ஆண்டு கால மசூதியை வனத்துறை இடிப்பதை தடுத்த நிறுத்திய இந்துக்கள்

 

உத்தர பிரதேசத்தில் 150 ஆண்டு கால மசூதியை வனத்துறை இடிப்பதை தடுத்த நிறுத்திய இந்துக்கள்

உத்தர பிரதேசத்தில் வனப்பகுதியில் இருந்த 150 ஆண்டு கால மசூதியை வனத்துறையினர் இடிக்க முயன்றதை இந்துக்கள் தடுத்து நிறுத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் சலாத் என்ற கிராமம் உள்ளது. மலைப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். 5 அல்லது 6 என்ற அளவிலேயே இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 150 ஆண்டுகால பழமையான பீர் பாபா மசூதி உள்ளது. இந்த மசூதி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக தெரிகிறது.

பிரிஜிபூஷன் சிங் ராஜ்புத் எம்.எல்.ஏ.

சர்க்ஹ்ரி தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ. பிரிஜிபூஷன் சிங் ராஜ்புத் வனத்துறையிடம் இந்த மசூதி தொடர்பாக புகார் அளித்தார். இதனையடுத்து அந்த இடத்துக்கு நேரில் சென்ற வனத்துறை அதிகாரிகளுக்கு, அந்த மசூதி மீது அங்குள்ள மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறித்து பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. மேலும் முஸ்லிம்களை காட்டிலும் அங்குள்ள இந்துக்கள் அந்த மசூதியை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மசூதியை இடிக்காமல் வனத்துறை அதிகாரிகள் திரும்பினர்.

உ.பி. காடு

இது குறித்து  மாஹோபா மண்டல வனத்துறை அதிகாரி ராம்ஜி ராய் கூறுகையில், சலாத் கிராமத்தில் 5-6 முஸ்லிம் குடும்பங்களே உள்ளன. அங்குள்ள 150 ஆண்டு கால மசூதி மீது அங்குள்ள முஸ்லிம்களை காட்டிலும் இந்துக்களுக்கு அதிகம் நம்பிக்கை உள்ளது. எனவே அந்த மசூதியை இடிக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.

பீர் பாபா மசூதியை புதுப்பிக்க அனைத்து சமுதாய மக்களும் நன்கொடை கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.