உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் விசிக சந்திக்கும் பிரச்சனைகள்? – வாசுகி பாஸ்கர்

 

உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் விசிக சந்திக்கும் பிரச்சனைகள்? – வாசுகி பாஸ்கர்

மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது விசிக. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் தேர்தல் களம் காண உள்ளனர். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க விசிக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளப் பதிவர், எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது விசிக. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் தேர்தல் களம் காண உள்ளனர். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க விசிக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளப் பதிவர், எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

வாசுகி பாஸ்கர்

வாசுகி பாஸ்கர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான உரையாடல் தொடங்கிய போது, “அது திமுகவில் இணைவதற்குச் சமம்” என்று முன்பு எழுதியிருந்தேன். அக்கருத்து வெறும் தன்மானம், சுயமரியாதை, கெளரவம் போன்ற உணர்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்ட கருத்துக்கள் மாத்திரமல்ல. அரசியலமைப்பு படியே அது திமுகவில் இணைவதற்குச் சமம் தான்.

தற்போது விடுதலைச் சிறுத்தையின் பொதுச்செயலாளர் முனைவர் இரவிக்குமார் உதயசூரியனில் போட்டியிட, தலைவர் திருமா அவர்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவாகி இருக்கிறது. தலைவர் திருமா அவர்களின் முடிவு மகிழ்ச்சியான செய்தியானாலும், திரு இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது வருந்தத்தக்க செய்தி தான்.

“வெற்றி பெறுவதற்கான யுத்தி” என்கிற அளவில் தான், விசிக உதயசூரியனில் போட்டியிட வேண்டுமென்று சொல்லி வந்தவர்களின் கருத்துக்களாக பெரும்பாலும் இருந்து வருகிறது. இதை இணையம் மூலம் அரசியல் பழகும் இளைஞர்கள் எப்படி புரிந்துக்கொள்கிறார்கள்? என்கிற ஐயத்தின் வெளிப்பாட்டில் தான் இப்பதிவு.

வேறொரு கட்சியின் சின்னத்தில் நிற்பதென்பது வெறும் தேர்தல் நேரத்தில் செய்துக் கொள்ளும் சமரசம் மட்டுமல்ல.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திரு. இரவிக்குமார் உதயசூரியனில் போட்டியிட வேண்டுமானால், வேட்பு மனுவோடு Form A , மற்றும் Form B சமர்ப்பிக்க வேண்டும். Form A மற்றும் Form B யில், உதயசூரியன் சின்னத்தினை வைத்திருக்கும் திமுக கட்சியின் பொது செயலாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

அதாவது, “நான் இந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர், ஆதலால் எனக்கு இந்த சின்னத்தை ஒதுக்குங்கள்” என்று படிவத்தின் மூலமாக வேண்டுகோள் விடுப்பார்கள். அது கட்சி சார்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும், பிறகே சின்னம் ஒதுக்கப்படும்.

இதனடிப்படையில் உதயசூரியனில் தேர்தலை சந்தித்தால், அது திமுக என்னும் கட்சியில் இணைந்து, உறுப்பினராகி தேர்தலை எதிர்கொண்டத்திற்க்கு சமம் தான். இதனால் உருவாகக்கூடிய எதிர்காலச் சிக்கல்கள்;

* திமுக சின்னத்தில் தேர்தலை சந்தித்து வெல்லும் பட்சத்தில், திமுகவின் கொறடாவுக்கு கட்டுப்பட்டு தான் இயங்க முடியும். திமுகவின் முடிவுகளையொட்டியே நிலைப்பாடெடுக்க வேண்டும்.

* மாநிலக் கட்சி என்கிற அங்கீகாரமும், விடுதலைச் சிறுத்தைகளுக்கென்று நிரந்தச் சின்னமும் ஒதுக்கப்பட வேண்டுமானால், குறைந்தது இரண்டு தொகுதியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் அல்லது 6 % வாக்குகளை நிரூபிக்க வேண்டும். ( பாட்டாளி மக்கள் கட்சி தன் மாம்பழ சின்னத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது இதன் அடிப்படையில் தான். 2016 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் தனித்து நின்றது வெறும் முதலமைச்சர் கனவோடு அல்ல, அது சாத்தியமில்லை என்பது பாமகவும் அறியும். தனித்து நின்று தங்கள் கட்சியின் குறைந்த பட்ச வாக்கு சதவிகித்தையாவது நிரூபிக்க வேணுமென்பதற்கான சோதனை முயற்சி தான் அது )

குறிப்பு: இதே காரணத்தை கொண்டு விசிக வின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டுமென்று 2014 பாராளமன்ற தேர்தலின் போது ஏற்கனவே பரிந்துரை செய்தவர் விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் இரவிக்குமார் தாம்.

* உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால், அது நிரந்தரச் சின்னம் பெறுவதற்கு உதவாது

* எதிர்காலத்தில் திமுகவோடு ஏதேனும் ஒரு புள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் முரண்பட்டால், அவரால் விடுதலைச் சிறுத்தைகளின் முடிவுகளுக்கு இணங்கி செயல்பட முடியாது.

விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கரசியல் வரலாற்றில் கூட்டணி கட்சியின் சின்னத்தில் நின்று தேர்தலைச் சந்திக்காமலில்லை. உதயசூரியனிலும் விசிக தேர்தலைச் சந்தித்திருக்கிறது. ஆனால் அதன் காலத்தையும், அதற்குப் பின் அவர்கள் எதிர்க்கொண்ட நெருக்கடிகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

2001 ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம் மங்களூர் தனித்தொகுதியில் திமுகவோடு கூட்டணி வைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் திருமாவளவன். அதைத்தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட முடியாத நெருக்கடியை உணர்ந்து திமுக வோடு முரண்பட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பாப்பாபட்டி கீரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வந்த ஊராட்சி தேர்தல் சம்மந்தமான சாதியப் பிரச்சனைகளுக்கு கூட, தன்னிச்சையாக செயல்பட முடியாமலிருந்தது திருமா அவர்களுக்கு பெருந்தடையாக இருந்து வந்தது.

அதே வேளையில், திமுக அதிமுக சின்னத்தை நம்பிராமல் 1996 ல் தேர்தலைச் சந்தித்த புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, 2000 ம் வாக்கில் தமிழக சட்டசபையில் அவர் எழுப்பிய கேள்விகளும், அவரின் செயல்பாடுகளும் முக்கியவத்தம் வாய்ந்தவை. அவர் உட்பட தலித் இயக்கங்கள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, பணியிடத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வெள்ளையறிக்கை மூலம் வெளியிட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். அதே போல திரு. இரவிக்குமார் அவர்களின் 2006 சட்டமன்ற செயல்பாடுகளும் கவனிக்கத்தக்கவை, அரசியல் தளத்திலும் தலித் வரலாற்று மீட்பிலும் ரவிக்குமாரின் பங்களிப்பு யாவரும் அறிந்ததே, ஆனால் சட்டமன்ற உறுப்பினராக அவரின் விவாதங்களும், பரிந்துரைகளும், கோரிக்கைகளும் முக்கியவத்தம் பெற்றவை. அப்படி அவர் செயல்பட முடிந்ததின் காரணம், சுதந்திர உறுப்பினராக தனிச்சின்னத்தில் நின்று விசிகாவை சார்ந்து அவர் பிரதிநித்துவம் பெற்றதால் தான்.

தற்போது திமுகவும் – விசிக வும் தோழமை இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்டாலும், தேர்தலுக்காக உடன்பட்டாலும், அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திமுகாவுக்குமான தளம் வேறு. ஏட்டளவில் கொள்கைகளுக்குள் ஒற்றுமைகள் இருந்தாலும், நடைமுறை அரசியலில் திமுகவை விட அழுத்தமான அரசியலை பேச வேண்டிய தேவையும் நிர்பந்தமும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இருக்கிறது.

கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் ஆனந்தூரில் உள்ள சேரியில் புகுந்து தலித் மக்களை தாக்கி, குழந்தைகளை தாக்கி, அவர்களது உடைமைகளை சூறையாடிய நிகழ்வாகட்டும், தொடர் ஆணவ கொலைகளாகட்டும், களத்திற்கு விரைந்து ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தேவை விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும், இன்னபிற தலித் அமைப்புகளுக்கும் தான் இருக்கிறதேயொழிய, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இன்னபிற கட்சிகளுக்கும் அது குறித்து பேசவோ, தீவிரமான விவாதத்திற்கு அப்பிரச்னைகளை கொண்டு போக வேண்டிய அவசியமோ இல்லை.

அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியலும் திமுகவின் அரசியலும் இடதுசாரி கட்சிகளின் அரசியலும் வேறு. இச்சக்திகள் ஒருங்கிணைய வேண்டிய அவசியமிருப்பதாலவே ஒருவரோடு ஒருவர் உருகி உபரிநீராகி நீர்த்துபோகச்செய்தல் ஜனநாயகமாகாது. இந்த ஜனநாயகப் புரிதலோடு அரசியலை அணுகினால், திமுகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் அரசியலையொட்டி தற்போது இணைந்திருக்க வேண்டிய தேவை இருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி எந்த நேரத்திலும் விடுதலைச் சிறுத்தை தன்னிச்சையியான முடிவை எடுக்கக்கூடிய சூழல் உருவாகாமல் போகாது. பாராளமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ, உதயசூரியன் சின்னத்தின் பிரதிநிதியாக சந்திக்கும் சட்டச் சிக்கல், நடைமுறைச் சிக்கல், விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு வங்கி, எதிர்கால நிரந்தரச் சின்னம் உள்ளிட்டவையை கருத்தில் கொள்ளுவதால் தான் இவையனைத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. நிகழ் காலத்தை மட்டுமே சிந்திப்பது தனி மனிதருக்கு உதவும், ஆனால் அரசியல் என்பது கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் தாண்டி எதிர்காலம் சம்மந்தப்பட்டது.

பாராளமன்றத்திற்குள் நுழையும் அறிவுஜீவிகளில் திரு. இரவிக்குமார் முக்கியமானவராக இருப்பார், இருக்க வேண்டும் என்பதில் எந்த ஐயமுமில்லை, ஆனால் அந்த பிரதிநித்துவம் விடுதலை சிறுத்தை கட்சிக்கும் அது பேசும் அரசியலுக்கும் எப்படி இணக்கமானதாக இருக்கப்போகிறது என்பதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

அதே வேளையில் இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சிந்தித்து ஆறுதலாகவும், மனநிறைவாகவும், இயக்கத்தையும் தொண்டர்களின் மனநிலையையும் அறிந்து “தனிச்சின்னத்தில் போட்டி” என்று முடிவெடுத்து இருக்கும் முனைவர். திருமாவளவன் அவர்களின் அறிவிப்பு, கடைக்கோடி கிராமத்து தொண்டனின் மனநிலையை ஒத்தது, மகிழ்ச்சி.

இருவரின் குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்கட்டும்.

எழுத்து: வாசுகி பாஸ்கர்