உண்மை நிலவரத்தை அறிய இன்று காஷ்மீர் செல்லும் 15 வெளிநாட்டு தூதர்கள்

 

உண்மை நிலவரத்தை அறிய இன்று காஷ்மீர் செல்லும் 15 வெளிநாட்டு தூதர்கள்

காஷ்மீரில் அமைதி திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்வையிட, உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 வெளிநாட்டு தூதர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று அங்கு செல்கின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு, தொலைத்தொடர்பு சேவை முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

பாதுகாப்பு பணியில் வீரர்கள்

அதேசமயம் அங்கு படிப்படியாக இயல்புநிலை திரும்பிய தொடங்கியவுடன் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கியது. தற்போது காஷ்மீரில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனையடுத்து அங்கு குவித்து இருந்த பாதுகாப்பு படை வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப பெற்று வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்வையிட வருமாறு உலக நாடுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்

இதனையடுத்து, காஷ்மீரில் அமைதி திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்வையிட, 15 நாடுகளின் தூதர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று அங்கு செல்கின்றனர். இந்த குழுவில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா ஆகிய பகுதிகளை சேர்ந்த நாட்டு தூதர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. கடைசி நேரத்தில் மேலும் சில நாடுகளை சேர்ந்த தூதர்கள் வர வாய்ப்புள்ளதால் தூதர்களின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. வெளிநாட்டு தூதர்கள் ஜம்மு அண்டு காஷ்மீரின் துணைநிலை ஆளுநரையும் சந்தித்து பேச உள்ளனர். ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகள் வேறு நாளில் வருவதாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்ததாக செய்தி அறிந்த வட்டராங்கள் தெரிவித்தன.