உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்பு

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கவுள்ளார்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கவுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. சபரிமலை வழக்கின் தீர்ப்பு, ஆதார் தீர்ப்பு, தன் பாலின உறவு தீர்ப்பு என பல்வேறு முக்கிய தீர்ப்புகளை கடந்த இரு வார காலங்களில் வழங்கி அதிரடி காட்டிய தீபக் மிஸ்ராவிற்கு முன்னதாக பிரிவு உபசார விழா நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், மக்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் கண்ணோட்டத்தை கொண்டே தீர்ப்பளித்துள்ளேன். எங்களுக்கு எல்லா வழக்குகளும் ஒன்றுதான். கண்ணீர் என்றால் கண்ணீர்தான்; தீர்ப்பு வழங்கும்போது பணக்காரன், ஏழை என நாங்கள் பார்ப்பதில்லை. முழு திருப்தியுடன் விசை பெறுகிறேன் என்றார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி முதல் 13 மாதங்கள் பதவி வகித்து வந்த தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ரஞ்சன் கோகாய், அசாமில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், 2001-ஆம் ஆண்டு கவுஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியானார். கடந்த 2012-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, அடுத்தாண்டு நவம்பர் 17-ம் தேதி வரை ரஞ்சன் கோகாய் தொடர்வார்.