உங்கள் படங்களில் இதை நிறுத்துங்கள், பின்னர் தலைவர் ஆகலாம்! – விஜய்க்கு அன்புமணி அறிவுரை

 

உங்கள் படங்களில் இதை நிறுத்துங்கள், பின்னர் தலைவர் ஆகலாம்! – விஜய்க்கு அன்புமணி அறிவுரை

விஜய் தன் திரைப்படங்களில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்துவிட்டு அரசியல் பேசட்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: விஜய் தன் திரைப்படங்களில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்துவிட்டு அரசியல் பேசட்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நான் சினிமாவில் வேண்டுமானால் நடிப்பேன், முதலமைச்சராக வந்தால் நடிக்கமாட்டேன் என்று பேசியிருந்தார். நீண்ட நாட்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில், அவரின் சமீபத்திய பேச்சு அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.

இந்நிலையில், விஜய் அரசியல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “முதலில் விஜய், தான் நடிக்கும் படங்களில், சிகரெட் பிடிப்பதை நிறுத்தட்டும். மது அருந்துவது போல் நடிக்காமல் இருக்கட்டும். ஒரு லீடர், ஒரு தலைவர் என்பவர், அனைவராலும் பின்பற்றப்படுபவராக இருக்கவேண்டும்.

நடிகர் விஜய்க்கே இது ஆரோக்கியக் குறைவாகிவிடும். சிகரெட் குடித்தால், மது அருந்தினால் கேன்ஸர் வரும், இன்னும் பல நோய்கள் வரும் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நடிகர் விஜய் நூறாண்டுகள் வாழவேண்டும். நானும் விஜய் படங்களையெல்லாம் பார்க்கிறவன் தான். எங்கள் குடும்பத்தார் கூட விஜய்யின் படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். அவர், சிகரெட் குடிக்கிற காட்சிகளை, மது அருந்துகிற காட்சிகளை இனி நடிக்காமல் இருக்கட்டும். நடிகர் விஜய் என்றில்லை, எல்லா நடிகர்களும் இப்படியான காட்சிகளில் நடிக்கக்கூடாது. நடிகர்கள் படத்துக்காக ஸ்டைலாக இதையெல்லாம் செய்வதைப் பார்த்துவிட்டு, இளைஞர்கள் அதில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.