உங்கள் தலைவரின் அறிக்கையைக் கூட படிக்க மாட்டீர்களா? திமுக எம்.பி-யை விலாசிய தினகரன்

 

உங்கள் தலைவரின் அறிக்கையைக் கூட படிக்க மாட்டீர்களா? திமுக எம்.பி-யை விலாசிய தினகரன்

திருப்பரங்குன்றன் இடைத்தேர்தல் குறித்து திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் கொடுத்திருந்த பேட்டிக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: திருப்பரங்குன்றன் இடைத்தேர்தல் குறித்து திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் கொடுத்திருந்த பேட்டிக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போஸ் மறைந்ததையடுத்து, காலியாக இருக்கும் அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால், அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதியும் காலியாகவே இருக்கிறது. இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை என அறிவிப்பு வெளியாகியதையடுத்து, அதிமுக அரசுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக அமைப்புச்செயலாளர் நண்பர் டிகேஎஸ் இளங்கோவன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருப்பரங்குன்றத்தில் தங்களது வேட்பாளர் ஜெயித்ததாக நீதிமன்ற தீர்ப்பு வந்தால், அங்கு இடைத்தேர்தலுக்கே வேலையில்லை என்றும் இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் தினகரனுக்கு இல்லையா என்றும் கேட்டுள்ளார்.

நண்பர் முதலில் தனது கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் நேற்று கொடுத்துள்ள அறிக்கையை படித்துப் புரிந்து கொள்ள முயல வேண்டும். 5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நாடகாவுக்கும், தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன என்று திருப்பரங்குன்றத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனால் தான், இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இவ்வாறு இரட்டை நிலை எடுத்தால், அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று கூறினேன்.
தனது கட்சி தலைவரின் அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இளங்கோவனுக்கு இல்லையா?” என கடுமையாக சாடியுள்ளார்.