உங்களுக்கு இனி ஒரு அண்ணனாக இருப்பேன்: செல்வராணியிடம் ஸ்டாலின் உருக்கம்

 

உங்களுக்கு இனி ஒரு அண்ணனாக இருப்பேன்: செல்வராணியிடம் ஸ்டாலின் உருக்கம்

கருணாநிதிக்கு இரங்கற்பா பாடியதால் அரசு நெருக்கடி கொடுத்ததாக பணி விருப்ப ஓய்வு பெற்ற காவலர் செல்வராணியிடம் இனி நான் உங்களுக்கு ஒரு அண்ணனாக இருப்பேன் என உருக்கமாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

திருச்சி: கருணாநிதிக்கு இரங்கற்பா பாடியதால் அரசு நெருக்கடி கொடுத்ததாக பணி விருப்ப ஓய்வு பெற்ற காவலர் செல்வராணியிடம் இனி நான் உங்களுக்கு ஒரு அண்ணனாக இருப்பேன் என உருக்கமாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு கட்சி பேதமின்றி, தொழில் பேதமின்றி அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில், திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவில் தலைமைக்காவலராக இருந்த செல்வராணியும் கருணாநிதிக்கு இரங்கற்பா தெரிவித்தார். அதனையடுத்து செல்வராணிக்கு மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மெமோவுக்கு அவர் விளக்கமளிக்கும் முன்பே அவர் திருச்சியில் இருந்து நாகைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வராணி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

மேலும், காவல்துறையில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. என்னை பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் அரசின் பங்கு நிறையவே இருக்கிறது. நான் மீண்டும் பணியில் சேர்ந்தால் நான் பழி வாங்கப்படலாம். இதற்கு முன்னர் ஜெயலலிதா மறைந்த போது நான் கவிதை வாசித்தற்கு ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று திருச்சி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி கேகே நகரில் இருக்கும் செல்வராணியின் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.

அப்போது செல்வராணியிடம் ஸ்டாலின், இரங்கல் தெரிவித்ததற்கா மெமோ கொடுத்தார்கள்? எவ்வளவு ஆண்டு இன்னும் பணி காலம் உள்ளது? என்றார். அதற்கு செல்வராணி இன்னும் 15 ஆண்டுகாலம் இருக்கிறது என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், இனி என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு செல்வராணியோ சிறிதும் கவலைப்படாமல் தைரியமாக, இனி கலைஞர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைப் பணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன் என்றார்.

இதனால் உருக்கமடைந்த ஸ்டாலின், கலைஞரை நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலைப்பட வேண்டாம் என உருக்கமாக தெரிவித்தார்.