ஈழ தமிழர்களை பற்றி பேச அதிமுக அரசுக்கு தகுதியில்லை: வைகோ கடும் தாக்கு

 

ஈழ தமிழர்களை பற்றி பேச அதிமுக அரசுக்கு தகுதியில்லை: வைகோ கடும் தாக்கு

ஈழ தமிழர் விவகாரத்தில் தலையிட அதிமுக அரசுக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

சென்னை: ஈழ தமிழர் விவகாரத்தில் தலையிட அதிமுக அரசுக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வில் தனி ஈழம் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மீண்டும் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் மீது போடப்பட்டிருந்த பிடிவாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றம் வந்திருந்த திருமுருகன் காந்தியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திருமுருகன் காந்தியை ஈவு இரக்கம் இல்லாமல் இந்த அரசு வஞ்சித்து வருகிறது. ஈழத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திருமுருகன் காந்தியை வஞ்சித்துவிட்டு, ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக பேச அதிமுக அரசுக்கு தகுதியில்லை” என தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.