இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-யை நீக்க வேண்டும்; முன்னாள் எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன் போர்க்கொடி!

 

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-யை நீக்க வேண்டும்; முன்னாள் எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன் போர்க்கொடி!

அமைச்சர் கடம்பூர் ராஜுவை மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி முன்னாள் எம் எல் ஏ மார்க்கண்டேயன் போர்க் கொடி தூக்கியுள்ளார்

விளாத்திகுளம்: அமைச்சர் கடம்பூர் ராஜுவை மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி முன்னாள் எம் எல் ஏ மார்க்கண்டேயன் போர்க் கொடி தூக்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் பிரிப்பு:

தூத்துக்குடி மாவட்டமாக செயல்பட்டு வந்த அதிமுக அமைப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என 2 மாவட்டங்களாக அண்மையில் பிரிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நியமனம் செய்யப்பட்டார்.

விளாத்திகுளம் வேட்பாளர்:

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள் வரும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிக்கான அதிமுக, திமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் மற்றும் திமுக சார்பில் ஏ.சி.ஜெயக்குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

vilathikulam

உள்ளுக்குள் பல்வேறு குளறுபடிகள் போட்டிகள் இருந்தாலும் திமுக சத்தமில்லாமல் விளாத்திகுளம் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக-வினுள் ஏற்பட்டிருக்கும் கோஷ்டி மோதலால் வேட்பாளர் தேர்வு முதலே ஏற்பட்ட சலசலப்புகள் தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோஷ்டி மோதல்:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட விளாத்திகுளம் எம்.எல்.ஏ., உமா மகேஸ்வரியின் பெயர் கடந்த தேர்தலில் கடைசி நேரத்தில் தான் பட்டியலில் இடம் பிடித்தது. அதுவும் ஜெயலலிதா அவர் மீது காட்டிய பரிதாபத்தால் கிடைத்தது என்றும் கூறப்பட்டது. அவர் மீது தற்போது தொகுதிக்குள் அதிருப்தியே நிலவுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் அவர் தற்போது டிடிவி அணியில் உள்ளார்.

kadambur raju

விளாத்திகுளம் தொகுதியை பொறுத்தவரை எந்த அணி என்பதெல்லாம் பிரச்னை அல்ல. சமுதாய ஓட்டுகளும், சின்னமும் தான் அங்கு எப்போதும் பேசும். பெரும்பாலும் அதிமுக வசமே அந்த தொகுதி இருந்துள்ளது. அந்த வகையில், முன்னாள் எம்.எல்.ஏ.,-க்களான சின்னப்பன் மற்றும் மார்க்கண்டேயன் ஆகியோரிடையே அதிமுக-வில் சீட்டு வாங்குவதில் நேரடி போட்டி நிலவியது.

இதில் சின்னப்பன், ஈ.பி.எஸ்., ஆதரவாளர். அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நெருக்கமானவர். ஆனால், மார்க்கண்டேயன் ஓ.பி.எஸ் ஆதரவாளர். சூழல் இப்படி இருக்க விளாத்திகுளம் தொகுதி சின்னப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதி மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் எடப்பாடி ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டதால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். அவரது மகனுக்கு மட்டும் சீட்டு வாங்குவதில் குறியாக இருந்து விட்டு ஆதரவாளர்களை கண்டுக்கவில்லை என வெளிப்படையாகவே அவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

தலைமைக்கு எதிராக போர்க்கொடி:

அந்த வகையில் அதிருப்தியடைந்துள்ள மார்க்கண்டேயன், தற்போது அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். மேலும் தனது செய்தித் தொடர்பாளர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், கட்சி வெற்றி பெறும் வகையில் முடிவு எடுக்க வேண்டும் என்பது தான் தொண்டர்களின் விருப்பம். அமைச்சர் கடம்பூர் ராஜுவை தேர்தல் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனது கருத்திற்கு தலைமை செவிமெடுக்கவில்லை. கடம்பூர் ராஜு தேர்தல் பொறுப்பாளராக இருந்தால், அதிமுக-வுக்கு 3-ம் இடம் தான் கிடைக்கும்.

markandeyan

மாவட்டத்தில் கட்சியை வழி நடத்தும் தகுதி அமைச்சர் கடம்பூர் ராஜு-வுக்கு இல்லை. எனக்கு சீட் கொடுத்தால் கடம்பூர் ராஜு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமையை மிரட்டி வருகிறார். ஆகவே செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன், தற்போதைய நிலையில் தலைமையை மிரட்டுவர்களுக்கு தான் சீட் கிடைக்கிறது.

சரமாரி குற்றச்சாட்டு:

அமமுக – அதிமுக என இரு பிரிவுகளாக இருப்பது கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்துகிறது. இரண்டும் இணைய வேண்டும். இ.பி.எஸ்.. ஓ.பி.எஸ் அகற்றி விட்டு புதிய தலைமையை அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். தேர்தலுக்குப் பின் அதிமுக ஒரே தலைமையின் கீழ் வரும், ஓ.பி.எஸ் தனது செல்வாக்கை இழந்து விட்டார், தனது மகனுக்கு சீட் வாங்குவது தான் அவரின் ஒரே குறி. இனி கட்சி என்னை வேட்பாளராக அறிவித்தாலும் நான் போட்டியிட மாட்டேன், விரைவில் எனது முடிவை அறிவிப்பேன். இந்த இடைத் தேர்தலில்  18 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவும் என்றார்.

eps ops

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,-வும், துனை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளருமான மார்க்கண்டேயன்  இவ்வாறு பேசி இருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னப்பன் vs மார்க்கண்டேயன்:

அதிமுக சார்பில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சின்னப்பன் அங்குள்ள பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மார்க்கண்டேயனுக்குத் தான் செல்வாக்கு அதிகம் என அதிமுக-வினர் தெரிவித்துள்ளனர்.

chinnappan

அதேசமயம், மார்க்கண்டேயன் பணத்தை வாரிஇறைத்து செலவு செய்பவர். ஆனால், சின்னப்பன் சிக்கனமாக செலவு செய்பவர் என்றும் கூறப்படுகிறது. மார்க்கண்டேயனுக்கு தனிப்பட்ட செல்வாக்குக்கு இருப்பதால் கட்சிக்கார்கள் இரவு, பகல் பாராமல் களப் பணி செய்வர். ஆனால், அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு கோவில்பட்டியில் இருந்து அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆட்கள் வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்கின்றனர் விளாத்திகுளம் அதிமுக-வினர்.