இ.பி.எஸ் அந்தர்பல்டி வெளியிட்ட தி.மு.க… கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

 

இ.பி.எஸ் அந்தர்பல்டி வெளியிட்ட தி.மு.க… கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தொடர்ந்து கூறி வந்த நிலையில், சட்டப்பேரவையிலும் பொது நிகழ்ச்சியிலும் தமிழகத்தில் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார். அந்த காட்சிகளை எல்லாம் தொகுத்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் குறும்படம் வெளியிட்டிருந்தனர். மேலும் கொரோனா வைரசின் தாக்கம் என்பதற்கு பதில் தாகம் என்று மாற்றி கூறியது உள்ளிட்ட வேறு சில சங்கடமான நிகழ்வுகளையம் அதில் தொகுத்திருந்தனர். மேலும், நாடே ஊரடங்கில் இருக்கும் நிலையில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர்களை வேலையைத்தானே செய்கிறார்கள் என்று அசால்டாக பதில் சொல்லும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. 

இந்த நிலையில் கொரோனா நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு இல்லாமல் களத்தில் இறங்கி நிவாரண உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கிவந்தார். தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறிவந்தார். அவர் கூறியது போலவே மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. 

அனைத்துக்கும் மேலாக பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை பற்றிய ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் மூலம், கொரோனா பற்றிய தகவலில் தமிழக அரசு பலவற்றை மறைக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

இதன் வெளிப்பாடுதான் இன்று வெளியான ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்ற சூடான அறிக்கை என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். மத்திய அரசு கேட்ட நிதியை அளிக்கவில்லை, இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும் என்று தமிழக அரசு கூறிவந்த ரேப்பிட் டெஸ்ட் கிட் எப்போது தமிழகத்துக்கு வரும் என்றே தெரியவில்லை. மத்திய அரசு தயங்கி வரும் நிலையில், ஒவ்வொரு மாநில அரசுகளும் தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்து உத்தரவை பிறப்பித்து வருகின்றன. மத்திய அரசு அறிவித்தால் நடைமுறைப்படுத்துவோம் என்று தமிழகம் மத்திய அரசின் பின்னால் ஒளிந்துகொண்டது. இதற்கு எல்லாம் முதலில் கோபப்பட வேண்டும் முதல்வரே என்று நெட்டிசன்கள் பதிவுகளைத் தட்டி வருகின்றனர்.