இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு நடந்து கொள்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு நடந்து கொள்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

சண்டிகர்: இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு மற்றும் ஹரியானாவில் உள்ள பாஜக அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதன் மூலம் நாட்டில் ஏழு கோடி வணிகர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று குற்றம் சாட்டியுள்ளது.

ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு பரந்த இ-காமர்ஸ் சேவைகளை அனுமதிக்க அரசாங்கம் எடுத்த முடிவானது, ஹரியானாவில் உள்ள 10 லட்சம் வணிகர்கள் உட்பட நாட்டின் ஏழு கோடி சிறு கடைக்காரர்களின் வணிகங்களையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடக் கூடியதாகும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஏகபோக உரிமையை வழங்கும் நிலையில் உள்ளூர் கடைக்காரர்களுக்கு அதே வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

வீடியோ மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜேவாலா, “மோடி அரசாங்கத்தின் வர்த்தக-விரோத மற்றும் கடைக்காரர்களுக்கு எதிரான முடிவை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று குற்றம் சாட்டியதோடு, இந்த விஷயத்தில் மறுபரிசீலனை கோரினார்.

e commerce

அரசாங்கத்தின் முடிவு நடைமுறைக்கு ஒத்து வராத நடவடிக்கை என்று கூறிய முன்னாள் ஹரியானா மந்திரி, சிறிய கடைக்காரர்கள் தங்கள் உள்ளூர் பகுதிகளில் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல்களில் விநியோகிக்க அனுமதி அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கூறினார். இதனால் சமூக விலகல் இலக்கு சாத்தியமாவதோடு, அதே நேரத்தில் நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியையும் ஆதரிக்கும் என்றார்.

மத்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதால் மொபைல் போன்கள், டி.வி.க்கள், குளிர்சாதன பெட்டிகள், மடிக்கணினிகள், ரெடிமேட் ஆடைகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான எழுதுபொருள் பொருட்கள் போன்ற மின்னணு பொருட்கள் ஏப்ரல் 20 முதல் இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும்.

கடைக்காரர்களின் துயரங்கள் மற்றும் பிரச்சினைகளை எடுத்துரைத்த சுர்ஜேவாலா, ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட வணிகங்களால் முழு எம்எஸ்எம்இ துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். கடைக்காரர்களும், உள்ளூர் வர்த்தகர்களும் தங்கள் தொழில்களில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளனர். மேலும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தங்கள் கடைகளிலும், கிடங்குகளிலும் கிடக்கின்றன என்றார்.

வணிகத்தை நிறுத்தி விட்டாலும் கடைக்காரர்கள் தங்கள் வாடகை, மின்சார பில்கள், வணிக வீட்டு வரி மற்றும் தங்கள் முதலீடுகளுக்கான வட்டிகளை செலுத்தி வருகின்றனர். அரசாங்க உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து கடைக்காரர்கள் ஊரடங்கின்போது தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் சில விசித்திரமான காரணங்களால் அவர்களை தண்டிப்பதில் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகத் தோன்றுவதாக சுர்ஜேவாலா கூறினார்.

ஊரடங்கு விலக்கப்படும்போது நாட்டில் 25 சதவீத கடைகள் மூடப்படும் என்று இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. அதாவது ஹரியானாவில் மட்டும் 2.5 லட்சம் கடைகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. அடுத்த 6-12 மாதங்களில் எந்தவொரு கடைக்காரரும் எதையும் சம்பாதிக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர் என்று சுர்ஜேவாலா கூறினார்.

அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க ஏப்ரல் 20 முதல் இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய முடிவு நன்கு சிந்திக்கப்பட்ட சதித் திட்டமாகும். இது சிறிய கடைக்காரர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஹரியானா மக்களுக்கு சேவை செய்வதற்காகவே முதலமைச்சர் (மனோகர்) கட்டர் ஜி மற்றும் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஏன் 10 லட்சம் கடைக்காரர்களின் வியாபாரத்தையும் விசுவாசத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என தெரியவில்லை. நாட்டில் ஒரு கோடிக்கு மேல் உள்ள கடைகள் மற்றும் சிறு வணிகங்களை மூடி, பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களின் முகவர்கள் மற்றும் கைக்கூலிகளாக மத்திய அரசு செயல்படுவதாக சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.