இவங்களோட கூட்டணி வேண்டாம்; தேமுதிக தொண்டர்கள் போர் கொடி!

 

இவங்களோட கூட்டணி வேண்டாம்; தேமுதிக தொண்டர்கள் போர் கொடி!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என பெரும்பாலான தேமுதிக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என பெரும்பாலான தேமுதிக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக-வை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளில் யார் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக இதில் இருந்து விலகியது.

எனவே அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணிக்கே சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது. பாமக-வுக்கு கொடுத்தது போல 7 சீட்டுகளை தேமுதிக விடாப்படியாக கேட்பதாகவும், ஆனால், இதற்கு அதிமுக பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என பெரும்பாலான தேமுதிக தொண்டர்கள் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடி அலை இருந்த போதே வெற்றி வாய்ப்பு பறி போன நிலையில், தற்போது விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணிக்கு செல்வதால் மக்களை எதிர் கொள்வதில் சிரமம் இருக்காது என்றும், மோடி மற்றும் அதிமுக அரசுக்கு எதிரான பிரசாரம் மட்டுமே தமிழகத்தில் தற்போது எடுபடும் என அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.