இளம்பெண்ணின் சாவில் மர்மம் | பெற்றோரை மிரட்டும் போலீஸ் அதிகாரிகள்

 

இளம்பெண்ணின் சாவில் மர்மம் | பெற்றோரை மிரட்டும் போலீஸ் அதிகாரிகள்

தேவகோட்டை இளம்பெண் மர்மச்சாவு குறித்து சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபாலை சந்தித்து முறையிட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவு செய்துள்ளது

தேவகோட்டை இளம்பெண் மர்மச்சாவு குறித்து சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபாலை சந்தித்து முறையிட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவு செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை  துடுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகள் பிரேமா (26). பட்டதாரியான பிரேமா, தேவகோட்டை பஸ் நிலையம் எதிரில் இருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு 9 மணியளவில், பிரேமாவின் தாயார் ராஜேஸ்வரிக்கு,  ஜவுளிக்கடையில் இருந்து தொலைபேசியில், ‘பிரேமா டூவீலரில் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்து உள்ளதாகவும், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும்’ தகவல் சொல்லியிருக்கிறார்கள். 

hospital

‘மகள் கீழே விழுந்து காயமடைந்திருக்கிறாள்’ என்று பதறியபடியே ஜவுளிக்கடையில்  தகவல் சொன்ன தனியார் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுப் போகச் சொன்னதால், பிரேமாவை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா இறந்து விட்டார்.  

இது குறித்து விசாரித்து வந்த தேவகோட்டை டவுன் போலீசார், விசாரணையில் பிரேமா கீழே விழுந்து இறந்ததுப் குறித்து வழக்குப் பதியவில்லை. பிரேமா இறந்ததும், அவரது பெற்றோர்களை சமாதானம் செய்து, அவர்களிடம் எழுதி வாங்குவதிலேயே முனைப்பாக இருந்துள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளது.  இந்நிலையில், கடந்த 15ம் தேதியன்று தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஜவுளிக்கடையின் உரிமையாளரிடம், பிரேமாவின் குடும்பத்தார் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

இந்த புகாரின் அடிப்படையில், பிரேமாவின் பெற்றோரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அதன் பிறகு இவர்களை தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து அங்கும் இவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். ‘ஜவுளிக்கடைக்காரர்களிடம் தொந்தரவு செய்தால் உங்கள் அனைவரையும் ஜெயிலில் அடைத்து விடுவோம்’ என போலீசார் மிரட்டி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

women's association

ஏற்கெனவே மகளை இழந்த துயரத்தில் இருக்கும் பிரேமாவின் பெற்றோர்களோ, ‘நாங்கள் பணம் கேட்டு யாரையும் மிரட்டவில்லை. போலீசார் தான் எங்களை மிரட்டி வருகின்றனர். எங்கள் மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என்று கூறி, சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தேவகோட்டை டிஎஸ்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து நம்மிடையே பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் சாந்தி, ‘பிரேமா இறந்த சம்பவம் குறித்து மாதர் சங்க நிர்வாகிகளுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுடனும் கலந்து ஆலோசித்து மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபாலை சந்தித்து மனுக்கொடுக்க உள்ளோம். பிரேமா மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்’ என்றார்.