இலவச விளம்பரம் தேடித் தந்த அதிமுக: ரூ.150 கோடி வசூலை நெருங்கிய சர்கார்!

 

இலவச விளம்பரம் தேடித் தந்த அதிமுக: ரூ.150 கோடி வசூலை நெருங்கிய சர்கார்!

சர்கார் திரைப்படத்துக்கு அதிமுக மூலம் இலவச விளம்பரம் கிடைத்ததை தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: சர்கார் திரைப்படத்துக்கு அதிமுக மூலம் இலவச விளம்பரம் கிடைத்ததை தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சைக்கு பின் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

sarkar

இதையடுத்து, மறுத்தணிக்கை செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அமைச்சர்களும், அதிமுகவினரும் சர்காருக்கு எதிராக செய்த அனைத்தும் படத்திற்கு இலவச விளம்பரத்தை தேடித் தந்ததாக கூறப்படுகிறது.

இத்தனை எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் கடந்து சர்கார் திரைப்படம் ரூ.150 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் சர்கார் ரிலீசான 4 நாட்களில் ரூ.6 கோடி வசூலித்திருப்பதாகவும், தினசரி 2 கோடி வரை வசூலிப்பதை பார்த்தால் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஃபிரான்ஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.