இலவசங்களை தர வரவில்லை: கிருஷ்ணகிரியில் கமல் பேச்சு!!!

 

இலவசங்களை தர வரவில்லை: கிருஷ்ணகிரியில் கமல் பேச்சு!!!

மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும் என கிருஷ்ணகிரியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

கிருஷ்ணகிரி: மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும் என கிருஷ்ணகிரியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வரும் கமல் ஹாசன் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: வேலைவாய்ப்பிற்காக தனது சொந்த மக்களை அடுத்த மாநிலத்திற்கு இந்த அரசு அனுப்பி வைத்து வேடிக்கை பார்க்கிறது. இங்கு கூடியிருக்கும் இளைஞர் கூட்டம் இதுவரை நடந்த நடக்கின்ற ஆட்சிகள் மீது பெரும் கோபத்திலும் ஏமாற்றத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் வேண்டுகிறார்கள், அதனை மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும்

மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்கும் கிராம சபைகளில் மறக்காமல் கலந்துகொள்ளுங்கள்.இளைஞர்கள் தைரியமாக உங்கள் எதிர்காலத்திற்காக குரல் கொடுக்க தயாராகி விட்டீர்கள் என்றால் நாளை நமதே! நிச்சயம் நமதே என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இங்கு நான் வந்திருப்பது உங்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக ஓட்டு பேரம் பேச வரவில்லை, இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதி தர வரவில்லை! மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும். கிராம சபை, மய்யம் விசில் என்று பல ஜனநாயக ஆயுதங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுக்கு கொடுத்து வருகிறது. நான் மக்களைச் சுற்றியே வருகிறேன், அதற்கு காரணம் மக்களின் நலன் மட்டுமே

மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை என் மீது நீங்கள் காட்டும் அன்பினால் எனக்கு அதிகரிக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெண்கள் விவசாயிகள், தொழிலாளிகள் என அனைவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது.

தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நல்லது செய்ய நேரமில்லை, மொத்தமாக செய்ய வேண்டியது தான். ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளைக்கு தேநீர் கூட குடிக்க முடியாது. பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள்,வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டியது தான் என்றார்.