இலங்கை குண்டுவெடிப்பு பழிவாங்கல் நடவடிக்கை; பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

 

இலங்கை குண்டுவெடிப்பு பழிவாங்கல் நடவடிக்கை; பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர்.

கொழும்பு: நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

srilanka attack

இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிக்கி சுமார் 310 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

srilanka attack

இந்நிலையில், குண்டு வெடிப்பு குறித்து விவாதிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடியது. அப்போது, உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரியது. நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே, நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

srilanka attack

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர். அதில், 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகை உலுக்கிய இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர், மாற்று மதத்தினர் குடியேற்றத்தை கண்டித்து இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.