இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி; இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை!

 

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி; இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை!

குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை

கொழும்பு: இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

srilanka

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது 9 பேர் எனவும், அதில் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணை மற்றும் குண்டு வெடிப்பு தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு அமைச்சர்கள் அதிபர் சிறிசேனவிடம் பேசியுள்ளதாகவும், இஸ்லாமிய மூத்த தலைவர்கள், மதகுருக்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

srilanka

தீவிரவாத அமைப்புகள் இஸ்லாமிய பெண்களின் உடையான பர்தாவை போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது, வெடிகுண்டுகளை மறைந்து செல்வது உள்ளிட்ட தங்களது நாசகார செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும், இலங்கையின் தேமேடகோடா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய பெண்கள் பலர் பர்தா அணிந்திருந்ததால் தப்பித்து விட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பர்தாவுக்கு ஒருவேளை தடை விதிக்கப்படும் நிலையில், பர்தாவை உபயோகித்து அதன் பின்னால் தீவிரவாதிகள் ஒளிந்து கொள்வதால் அதற்கு தடை விதித்துள்ள ஐரோப்பா மற்றும் சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பட்டியலில் இலங்கையும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

இலங்கை காவல்துறை தலைவர், பாதுகாப்பு செயலர் ராஜினாமா; அதிபர் சிறிசேன அதிரடி!