இலக்கை நெருங்கி வரும் நிதிப்பற்றாக்குறை! பரிதவிக்கும் பா.ஜ.க. அரசு

 

இலக்கை நெருங்கி வரும் நிதிப்பற்றாக்குறை! பரிதவிக்கும் பா.ஜ.க. அரசு

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதத்திலேயே மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கில் 92.6 சதவீதத்தை எட்டி விட்டது இதனால் வருவாயை பெருக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

மத்திய அரசின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறை. இந்த நிதிப்பற்றாக்குறையை குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருக்க மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயக்கப்படும். இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் (ரூ.7.07 லட்சம் கோடி) அளவுக்கு வைத்திருக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயக்கப்பட்டது.

நிதிப்பற்றாக்குறை

இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) மத்திய அரசு மொத்தம் ரூ.14.89 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. அதேசமயம் இதேகாலத்தில் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.8.37 லட்சம் கோடிதான். ஆக ரூ.6.52 லட்சம் கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 92.6 சதவீதமாகும். இன்னும் 6 மாதங்களில் உள்ளதால் நிதிப்பற்றாக்குறையை நிர்ணயித்த இலக்குக்குள் மத்திய அரசால் வைத்திருக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வரி

செப்டம்பர் வரையிலான கடந்த 6 மாதத்தில் மொத்த வருவாயில், வரி வாயிலான நிகர வருவாய் ரூ.6.07 லட்சம் கோடியாகவும், வரியில்லாத நிகர வருவாய் ரூ.2.09 லட்சம் கோடியாகவும் கிடைத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் செலவினத்தை குறைப்பதோடு, வருவாயையும் அதிகரித்தால் மட்டுமே நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முடியும். அதனால் மத்திய அரசு வருவாயை பெருக்கவும், செலவினங்களை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.