இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை

 

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்!

இன்று உலக ஹைப்பர்டென்ஷன் (World Hypertension Day) தினம் ஆகும்.

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்பது ஹைப்பர்டென்ஷன் (Hypertension) என்றும் அழைக்கப்படுகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பெரிய பிரச்சினைகளை உயர் இரத்த அழுத்தம் வரவழைக்கிறது. ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கு உடல் பருமன், குடும்ப பிரச்சனை, அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையே பெரும்பாலும் காரணிகளாக அமையலாம்.

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் மார்பு வலி, தலைச்சுற்றல், சுவாசக் கஷ்டங்கள் மற்றும் தலைவலி ஆகியவை ஆகும். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்!

ttn

சரியான உணவு:

சரியான உணவை உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகளை உண்ண வேண்டும். சில உணவுகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். உணவை வாங்குவதற்கு முன் ஊட்டச்சத்து லேபிள்களைப் படிக்க வேண்டும். கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ttn

சோடியம் குறைப்பு:

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க சோடியம் உட்கொள்வதை குறைத்துக் கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் நிரம்பியுள்ளன. உணவில் கூடுதல் உப்பு சேர்ப்பதைத் தவிர்த்து மருத்துவ நிபுணர் பரிந்துரைக்கும் அளவை கடைபிடிக்க வேண்டும். அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் இரத்த ஓட்டத்தில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீரகங்கள் தண்ணீரை வெளியேற்றும் திறனை இழக்கும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

ttn

சிகரெட் மற்றும் மதுபானம்:

நிறைய ஆல்கஹால் குடிப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமில்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல புகைபிடிப்பதைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களைத் தடுக்க முடியும். புகைபிடிப்பதை விட்டுவிட விரும்பினால், புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்ய வேண்டும்.

ttn

உடற்பயிற்சி செய்க:

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம். குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏரோபிக்ஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், நடைபயிற்சி அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எந்த உடற்பயிற்சியையும் செய்யலாம். அதேசமயம் தவிர்க்க வேண்டிய சில உடற்பயிற்சிகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்தல் நல்லது. உடல் பருமன் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே உங்கள் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

ttn

சிக்கல்களை தீருங்கள்:

உங்கள் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்பட்டாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால் உங்களுக்கு மனஅழுத்தம் கொடுக்கக் கூடிய விஷயங்களை, சிக்கல்களை பற்றி ஆராயுங்கள். அவற்றை தீர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சிறிது நேரம் ஒதுக்கி ரிலாக்சாக ஓய்வெடுக்க வேண்டும். வாசித்தல், இசையைக் கேட்பது மற்றும் தோட்டக்கலை போன்ற உங்களுக்கு பிடித்த செயல்களைச் செய்யலாம். சுவாச பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை செய்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

உங்கள் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது கண்காணிக்க மறக்க கூடாது. அதேபோல மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.