இரட்டை கோபுர தாக்குதலில் சேதமான சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

 

இரட்டை கோபுர தாக்குதலில் சேதமான சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

நியூயார்க்: இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரெயில் நிலையம் 17ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001-ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானம் மூலம் தற்கொலைப் படை தாக்குதலை நிகழ்த்தினர். இந்த கொடூர தாக்குதலின் போது சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்தபோது அதன் அருகே இருந்த சுரங்க ரயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்தது. அதன் பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின. இதன் காரணமாக அந்த ரெயில் நிலையம் பல வருடங்களாக மூடப்பட்டது.

இதையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பணிகள் முடிந்து ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. மக்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அங்கு ரயில் ஓடுவதை செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.