இரட்டை இலை சின்ன வழக்கில் மேல்முறையீடு-டிடிவி தினகரன் அறிவிப்பு

 

இரட்டை இலை சின்ன வழக்கில் மேல்முறையீடு-டிடிவி தினகரன் அறிவிப்பு

இரட்டை இலை சின்ன வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி: இரட்டை இலை சின்ன வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அக்கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறியது. அந்த வகையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், மற்றும் அதிமுக கட்சிப் பெயர்களை, டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு இணைந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின் ஜாமீன் வெளிவந்தார். இதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் அத்தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.

அதேசமயம், இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.

இதனிடையே, திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரட்டை இலை வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு வரவில்லை என்றால் தேர்தல் ஆணையம் தினகரனின் மனு மீது முடிவு எடுக்கலாம் என கூறியது.

இந்த சூழலில், இரட்டை இலை யாருக்கு என்ற வழக்கில் தீர்ப்பளித்த தில்லி உயர் நீதிமன்ற திபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னத்தை ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கு ஒதுக்கியது சரியே என்று அதிரடியாக உத்தரவிட்டு, தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளிலும் சுயேட்சையாக எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்த தினகரன், அ.ம.மு.க-விற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம், குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.