இரட்டை இலைக்கு லஞ்சம்: பொய் வழக்கு என நிரூபிப்பேன்-டிடிவி தினகரன் சூளுரை

 

இரட்டை இலைக்கு லஞ்சம்: பொய் வழக்கு என நிரூபிப்பேன்-டிடிவி தினகரன் சூளுரை

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு, பொய் வழக்கு என நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு, பொய் வழக்கு என நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இடைத்தேர்தலின் போது, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், மற்றும் அதிமுக கட்சிப் பெயர்களை, டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு இணைந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின் ஜாமீன் வெளிவந்தார். இதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் அத்தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.

அதேசமயம், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, டிடிவி தினகரன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தினகரன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளத்தால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறியதுடன், அவர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், டிசம்பர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.