இயக்குநர் ராம் இப்படிச் செய்யலாமா ?

 

இயக்குநர் ராம் இப்படிச் செய்யலாமா ?

பேரன்பு திரைப்படத்தின் பத்திரிகையாளருக்கான சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

சென்னை: பேரன்பு திரைப்படத்தின் பத்திரிகையாளருக்கான சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘பேரன்பு’ படத்தின் பத்திரிகையாளர்களின் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்போதும் தனித்திரையரங்கில் காட்டப்படும் காட்சி, தயாரிப்பாளர்களின் சூழலுக்காக மக்கள் பார்க்கும் திரையரங்கில் திரையிடப்பட்டது. விருப்பம் உள்ள பத்திரிகையாளர்கள் மட்டும் படம் பார்க்க வந்தனர். இயக்குநர் ராம் மீது இருக்கும் மரியாதையின் காரணமாக பெரும்பான்மையான மீடியாக்கள் படம் பார்க்க வந்திருந்தனர். 

அதே நேரத்தில் இயக்குநர் ராமின் படக்குழுவினர் அவர்களின் உறவினர்கள் என்று பலரும் திரையரங்கை நிறைத்திருந்தனர். படம் டைட்டில் போட ஆரம்பித்ததும்  கைதட்ட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பெயருக்கும் கைதட்டல் என்று ரகளையாக இருந்தது. படமோ உணர்வுகளைப் பேசும் அமைதியான கதை. ஆனால் ஏதோ அரசியல் கூட்டத்திற்கு ஆள் திரட்டி வந்திருந்ததுபோல, படத்தில் மம்மூட்டி திரும்பினால் கைதட்டு, காட்சியை காட்சினால் கைதட்டு என்று படத்திற்குள் நம்மைச் செல்ல விடாமல் செய்துவிட்டனர் ராம் அழைத்து வந்திருந்த ஆட்கள்.

இங்கே படத்தின் கதைக்குள் நாம் போகாமல், இந்த செயல் எந்தளவுக்கு முரண்பாடானது பார்க்க வேண்டும். வழக்கமான சினிமாவாக இல்லாமல் உலகத் தரத்திற்கு எடுக்க வேண்டும் என்ற முயற்சியோடு எடுக்கப்பட்ட படத்தை பார்க்க விடாமல், ரஜினி, கமல் படம் பார்க்கும் மனநிலைக்குப் படம் பார்ப்பவர்களைக் கொண்டு செல்வது நியாயமா ராம் ? எல்லோரும் கைதட்டினால்தான் மீடியாக்காரர்கள் இது நல்ல சினிமா என்று புரிந்து கொள்வார்கள் என்கிற திட்டமா ? என்பது புரியவில்லை.   இந்த சலசலப்புக்கிடையே இடைவேளை விட்டது. இந்த கைதட்டல் விவகாரம் வெளியே இருதரப்பினர்க்கிடையே வாக்குவாதமாக மாறியது. இனி எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் மதிப்பிற்குரிய படைப்பாளி ராமிடம் நாம் வைக்கும் கோரிக்கை.