இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்: வடிவேலு சர்ச்சை பேச்சு குறித்து சமுத்திரக்கனி காட்டம்!

 

இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்: வடிவேலு சர்ச்சை பேச்சு குறித்து சமுத்திரக்கனி காட்டம்!

நடிகர் வடிவேலு இயக்குநர்களை அவமரியாதையாகப் பேசியது குறித்து சமுத்திரக்கனி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகர் வடிவேலு இயக்குநர்களை அவமரியாதையாகப் பேசியது குறித்து சமுத்திரக்கனி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் வடிவேலு நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். 

படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த வேலையில், சில பல பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போகிறது. இதனால், வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை போட்டுள்ளது. 

இந்தநிலையில் நடிகர் வடிவேலு #prayfornesamani ஹாஸ் டாக் உலகம் முழுக்க ட்ரெண்டானது குறித்து  தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை ஒருமையில் பேசினார். 

அவரின் அந்த பேச்சு திரைத்துறையினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தற்போது இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகரும்,இயக்குநருமான சமுத்திரக்கனி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும்  தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!’ என்று பதிவிட்டுள்ளார்.