இம்ரான் கானின் அழைப்பை ஏற்ற அபுதாபி பட்டத்து இளவரசர்

 

இம்ரான் கானின் அழைப்பை ஏற்ற அபுதாபி பட்டத்து இளவரசர்

பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்த அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

துபாய்: பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்த அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்று அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டாவது முறையாக, ஐக்கிய அரபு அமீரக நாடான அபுதாபிக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயீத் அல் நஹ்யானுடன் இம்ராக் கான் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில், இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவுரவிக்கும் வகையில் அவருக்கும், அவருடன் வந்திருந்த குழுவினருக்கும் அபுதாபி பட்டத்து இளவரசர் மதிய உணவு விருந்து அளித்தார். தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமை இம்ரான் கான் சந்தித்து பேசினார். இதையடுத்து, நேற்று இரவே அவர் பாகிஸ்தான் திரும்பினார்.

முன்னதாக, பாகிஸ்தான் நாட்டுக்கு வருமாறு அபுதாபி பட்டத்து இளவரசருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அந்த அழைப்பை பட்டத்து இளவரசர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.