இம்ரான்கான் பதவியேற்பு விழாவுக்கு மோடி போகிறாரா? எதிர்பார்ப்பில் இந்தியா-பாக் மக்கள்

 

இம்ரான்கான் பதவியேற்பு விழாவுக்கு மோடி போகிறாரா? எதிர்பார்ப்பில் இந்தியா-பாக் மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இம்ரான்கான் தனது பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமர் உள்பட தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு தலைவர்களை அழைக்க பரிசீலித்து வருவதாக அவரது கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடந்த 25 வது பொதுத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அரசமைப்பதற்கான பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனியொரு கட்சியாக பெரும்பான்மை பெற்றுள்ளது. அதனால், இம்ரான்கான் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, இம்ரான்கான் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்திய பிரதமர் மோடி இம்ரான்கான் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி சேர்ந்து செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய இம்ரான்கான் இருநாடுகளுக்கு இடையே நிலவும் குழப்பங்களும் பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று கூறினார். முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றபோது பேசிய இம்ரான்கான், இந்தியா பாகிஸ்தான் இடையே நல்ல உறவு ஏற்பட்டால் அது நம் எல்லோருக்கும் நன்மை தரும் என்று கூறினார். மோடியும் இம்ரான்கானும் இப்படி நட்பு பாராட்டும் முறையில் பேசியதால், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இந்திய பிரதமர் மோடி அழைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்திய ஊடகங்களுக்கு கூறுகையில், இம்ரான்கான் பிரதமர் பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி உள்பட தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு தலைவர்களையும் அழைப்பதற்கு பரிசீலிக்கப்பட்டுவருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபவத் சௌத்ரி கூறுகையில், பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமர் மோடியை அழைப்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான்கானும் நட்பாக அனுகிவருகின்றனர். அதனால், இம்ரான்கான் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது.