இப்போதைக்கு கொரோனா வைரஸ் விடாது…… பங்கு வர்த்தகத்தில் தாக்கம் எதிரொலிக்கும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 

இப்போதைக்கு கொரோனா வைரஸ் விடாது…… பங்கு வர்த்தகத்தில் தாக்கம் எதிரொலிக்கும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

கொரோனா வைரஸ், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரம் உள்ளிட்டவையின் தாக்கம் வரும் வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. உலக நாடுகளில் குறிப்பாக இத்தாலி தற்போது கொரோனா வைரஸ் பரவும் முக்கிய பகுதியாக விளங்குகிறது. அங்கு இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,266 பேர் பலியாகி உள்ளனர். நம் நாட்டில் இதுவரை 2 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகினர் மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டு விட்டது. வரும் நாட்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் 25 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறையும். மேலும் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க சில நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு இது உதவும். நாளை எஸ்.பி.ஐ. கார்டு பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய்

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்.) வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை நாளைக்குள் (மார்ச் 16) செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்து இருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலை இந்த வாரம் தெரிய வரும். யெஸ் பேங்க் விவகாரத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடக்கிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கடந்த பிப்ரவரி மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் நாளை வெளிவருகிறது. அமெரிக்க மைய வங்கியின் வெளிச்சந்தை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும். இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் வரும் வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளில்  போக்கினை நிர்ணயம் செய்யும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.