இன்றைய வரலட்சுமி விரதத்துல இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

 

இன்றைய வரலட்சுமி விரதத்துல இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

வரலட்சுமி விரதம் என்று சொன்னாலே, அது ஏதோ பெண்களுக்கான பிரத்யேக விரத முறை என்று பலரும் நினைக்கிறார்கள்.

வரலட்சுமி விரதம் என்று சொன்னாலே, அது ஏதோ பெண்களுக்கான பிரத்யேக விரத முறை என்று பலரும் நினைக்கிறார்கள். விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தான் இழந்த தனது  ராஜ்ஜியத்தை திரும்பப் பெற்றான். அதனால், வரலட்சுமி விரதம் ஏதோ பெண்களுக்கு மட்டுமேயான விரதம் என்று ஒதுங்கி நிற்காதீர்கள். ஆண்களும் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளலாம். செல்வம், வீரம், ஆயுள், ஆரோக்கியம் எல்லாம் ஆண்களுக்கு வேண்டாமா?

வரலட்சுமி பூஜை மேற்கொள்ளும் போது, மகாலட்சுமிக்கு ப்ரியமான இந்த விஷயங்களை எல்லாம் செய்ய மறக்காதீங்க. இந்த முறைகள் படி நீங்கள் பூஜைகள் செய்தால் நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.
தாமரைப் பூக்களில் வாசம் செய்யும் மகாலட்சுமியை இந்த வரலட்சுமி தினத்தில் தாமரைப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் நிரந்தரமாக எப்போதும் மகாலட்சுமி தங்கி வாசம் செய்வாள். இதனால் குடும்பத்தின் செல்வ வளம் பெருகும். திருமணமாகாத பெண்கள், வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இந்த வரலட்சுமி பூஜையில் நெய் விளக்கை மறக்கக் கூடாது. வரலட்சுமி பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம். வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி தினத்தன்று மட்டும் என்று நினைக்காமல் பொதுவாகவே வீடுகளில் மகாலட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். 

வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம். வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.  பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும். இன்று புண்ணிய நதிகளில் நீராடினால், ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும். வரலட்சுமி பூஜை தினத்தன்று  சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தான் சண்முகனைப் பெற்றாள்.