இன்று முதல் மீண்டும் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள்: இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்

 

இன்று முதல் மீண்டும் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள்: இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்

சுமார் 2 மாதத்துக்கு பிறகு ஜம்மு அண்டு காஷ்மீரில் இன்று நண்பகல் 12 மணி முதல் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் செயல்பாட்டு வருகிறது. அதேசமயம் ப்ரீபெய்ட் மொபைல் சேவைகள் எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தெரியவில்லை.

கடந்த ஆகஸ்ட் 4ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீரில் லேண்ட்லைன், மொபைல் சேவைகள் உள்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டது. மேலும், அன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்களை பாதுகாப்பு படையினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் பல்வேறு கட்டுபாடுகள் அங்கு விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் (ஆகஸ்ட் 5) காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 பிரதேசங்களாக பிரித்தது.

பாதுகாப்பு பணியில் வீரர்கள்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்குவதால் எந்தவித பிரச்னையும் ஏற்பட கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தொலைத்தொடர்பு முடக்கம், தலைவர்கள் வீட்டு காவல், கட்டுபாடுகள் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. காஷ்மீரில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கியவுடன் படிப்படியாக கட்டுப்பாடுகளை மாநில நிர்வாகம் தளர்த்தியது. மேலும் சுமார் மாதமாக முடக்கி வைத்திருந்த லேண்ட்லைன் சேவையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

ரோஹித் கன்சால்

தற்போது வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஜம்மு அண்டு காஷ்மீரின் முதன்மை செயலர் ரோஹித் கன்சால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  அக்டோபர் 14ம் தேதி (இன்று) நண்பகல் 12 மணி முதல் அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கி விடும். அதேசமயம் ப்ரீபெய்ட் மொபைல் சேவைகள் எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தெரியவில்லை.