இன்று முதல் அமைச்சரவை கூட்டம்…. வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்து துறைகளுடன் சந்திப்பு….. களத்தில் இறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால்…

 

இன்று முதல் அமைச்சரவை கூட்டம்…. வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்து துறைகளுடன் சந்திப்பு….. களத்தில் இறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தை நடத்துகிறார். அதனை தொடர்ந்து அனைத்து துறைகளுடான சந்திப்பில், தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த 10 அம்ச உத்தரவாதங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துகிறார்.

மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் கடந்த 11ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தனது ஆட்சியை தக்கவைத்து கொண்டது. பா.ஜ.க. 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு சென்ற தேர்தல் போலவே ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.

டெல்லி சட்டப்பேரவை

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றார். நேற்று டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பஜ்ஜாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின் டெல்லியின் புதிய நீர் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றம் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்குவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என்பது தொடர்பாக அவர்களுடன் கெஜ்ரிவால் விவாதித்தார்.

டெல்லி குடிநீர் வாரியம்

இந்நிலையில் கெஜ்ரிவால் 3வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றபிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை கூட்டத்தை நடத்துகிறார். அந்த கூட்டத்தில் எப்போது முதல் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது, பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அனைத்து துறைகளை அதிகாரிகளையும் கெஜ்ரிவால் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த 10 அம்ச உத்தரவாதங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அவர்களிடம் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார்.