இன்று மாலை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்

 

இன்று மாலை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளது

சென்னை: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும் மேகேதாட்டுவில் கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகத்தின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் தோழமைக்கட்சிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், மேகேதாட்டுவில்  அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சட்டமன்ற கூட்டதை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க டிசம்பர் 6-ம் தேதி (இன்று) தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று மாலை கூடவுள்ளது.

அதில், காவிரியில் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.