இன்று தமிழகம் வரும் மோடி: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

 

இன்று தமிழகம் வரும் மோடி: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரதமர் மோடி இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.

இதில் முதல் நிகழ்வாக  திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். இதை தொடர்ந்து சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்கள். இதையடுத்து சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்கள். 

அதே போல் எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்குக் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்கள். மேலும் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு, திருப்பூர், பெருமாநல்லூரில் பிற்பகல் 02.00 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியின்  பொதுக்கூட்டத்தில் உரையாடுகிறார்கள்.  இதற்காக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தேர்வு செய்யப்பட்டு, 40 அடி நீளத்திலும், 60 அடி சுற்றளவிலுமான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வந்து இறங்குவதற்காக மைதானம் அருகே, 3 இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பொதுக்கூட்ட மேடைக்கு அருகிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான மேடை அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சுமார் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

இதனிடையே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi மற்றும் #GoBackSadistModi என்ற ஹேஷ்டாக்  இணையதளத்தில்   டிரெண்டாகி வருகிறது. அதேபோல், #TNWelcomesModi என்கிற வாசகமும் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. 

முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்  நாட்டு விழாவில் மோடி கலந்துகொள்ள தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது.