இன்று ஜம்மு அண்டு காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள்…. போன வேகத்திலேயே திரும்பி வர அதிக வாய்ப்பு…

 

இன்று ஜம்மு அண்டு காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள்…. போன வேகத்திலேயே திரும்பி வர அதிக வாய்ப்பு…

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என மத்திய அரசு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் ஜம்மு அண்டு காஷ்மீரில் சுமார் 400 அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுமார் 2 வாரங்களுக்கும் நீடித்த கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை முதல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டன.

மேலும், கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கின. இது போன்ற நடவடிக்கையால் அங்கு இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு இன்று ஜம்மு அண்டு காஷ்மீரை சென்று பார்வையிட உள்ளது. 

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தி.மு.க.விலிருந்து திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தினேஷ் திரிவேதி உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய குழு இன்று ஜம்மு அண்டு காஷ்மீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம்,  எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகரை பார்வையிட வரவேண்டாம் என ஜம்மு அண்டு காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை நேற்று மாலை  வேண்டுகோள் விடுத்தது. அமைதி, சட்டம் மற்றும் ஒழுங்கை தொடர்ந்து பாதுகாக்கவும், மனித உயிர் இழப்புகளை தடுக்கவும் அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதை மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றாலும், அவர்களை காஷ்மீர் அரசு நிர்வாகம் அப்படியே திருப்பி அனுப்பும் என தெரிகிறது.