இன்று காஷ்மீர் செல்லும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு- பாகிஸ்தானின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதிலடி

 

இன்று காஷ்மீர் செல்லும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு- பாகிஸ்தானின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதிலடி

காஷ்மீரின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் கொண்ட குழு இன்று நேரடியாக அங்கு சென்று பார்வையிடுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முந்தைய நாளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாத தலைவர்களை வீட்டு காவலில் வைத்தது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும், செல்போன், இன்டர்நெட் என அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் முடக்கியது. மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன் அனைத்து கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்தியது. மீண்டும் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டது. வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் இல்லாத பொல்லாததை சொல்லி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஷ்மீரின் உண்மை நிலவரத்தை உலக நாடுகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், சிறப்பு அந்தஸ்து நீக்கியதற்கு பிறகு முதல் முறையாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அங்கு சென்று பார்வையிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

காஷ்மீர்

காஷ்மீரின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் கொண்ட குழு நேற்று நம் நாட்டுக்கு வந்தது. டெல்லியில் பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து தகவல் விளக்கியதுடன், தீவிரவாதத்தை ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடி வலியுறுத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் நிலவரம் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினார். இதனையடுத்து இன்று 27 பேர் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு காஷ்மீருக்கு நேரடியாக சென்று உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள உள்ளனர்.