இன்றுடன் முடிவடையும் அயோத்தி வழக்கு விசாரணை! தீர்ப்பு தேதியும் முடிவு?

 

இன்றுடன் முடிவடையும் அயோத்தி வழக்கு விசாரணை! தீர்ப்பு தேதியும் முடிவு?

மிகவும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைகிறது. நவம்பர் முதல் வாரத்தில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசம் அயோத்தியில் 1992ல் பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ். கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரித்து எடுத்துக்கொள்ளும்படி 2010ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதனை 3 அமைப்புகளுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

உச்ச நீதிமன்றம்

இதனையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தொடரப்பட்டன. அயோத்தி விவகாரம் தொடர்பாக மொத்தம் 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்தியஸ்தம் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றால் மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் மத்தியஸ்தம் முயற்சி தோல்வியில்தான் முடிவடைந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீவிரம் காட்டியது.

இந்த வழக்கு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வரை தொடர்ந்து 39 நாட்களாக அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.  தொடர்ந்து 40வது நாளாக இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. இன்றுடன் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால் அதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும். அனேகமாக நவம்பர் 4-5ம் தேதிகளில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.