இன்னும் 18 மாசத்துல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,200ஆக உயரலாம்… ஆய்வாளர்கள் கணிப்பு…

 

இன்னும் 18 மாசத்துல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,200ஆக உயரலாம்… ஆய்வாளர்கள் கணிப்பு…

2021ம் ஆண்டு இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.82 ஆயிரமாக உயரலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

உலகளவில் பொருளாதார வளர்ச்சி மீதான நிச்சயமற்ற தன்மை காரணமாக பங்கு மற்றும் கடன் போன்ற இடர்பாடான சொத்துக்கள் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் பாதுகாப்பான புகலிட சொத்தாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார கவலைகள் தங்கத்தை பதுக்கி வைக்க வழிவகுத்தன. இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சிறிது வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் ரூபாய் மதிப்பு அடிப்படையில் தங்கத்தின் விலை அதிகம் உயர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ்

சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1,750 டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28 கிராம் அளவாகும். 2021ம் டிசம்பருக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,000 டாலராக உயரும் என பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ் மதிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் மத்திய வங்கிகளும், அரசாங்கங்களும் இருப்பு நிலைகள் மற்றும் நிதிப்பற்றாக்குறையை இரட்டிப்பாக்குவதால், அடுத்த 18 மாத காலத்துக்கான தங்க விலை இலக்கை 2 ஆயிரம் டாலரிலிருந்து 3 ஆயிரம் டாலர்களாக உயர்த்த முடிவு செய்துள்ளோம் என பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ் என தெரிவித்துள்ளது.

தங்க நகை

அடுத்த 18 மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3 ஆயிரம் டாலராக உயரும் என்றால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.82 ஆயிரமாக உயரும். கடந்த ஒராண்டில் தங்கத்தின் விலை 75 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 18 மாதங்களில் தங்கத்தின் விலை 76 சதவீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்திய புல்லியன் அண்டு ஜூவல்லர்ஸ் சங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி, இந்த மாதத்தின் முதல் 15 தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை  (24 காரட் 10 கிராம்)  7 சதவீதம் அதிகரித்து ரூ.46,476ஆக உயர்ந்தது. இது கடந்த மார்ச் 31ம் தேதியன்று ரூ.43,725ஆக இருந்தது.