இனி விமானங்களில் தேன் கலந்த டீ, காபி பருகலாம் – நிதின் கட்கரி தகவல்…

 

இனி விமானங்களில் தேன் கலந்த டீ, காபி பருகலாம் – நிதின் கட்கரி தகவல்…

இனி விமான பயணங்களின் போது தேன் கலந்த டீ, காபி வழங்குவதற்கு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும் என நிதின் கட்கரி தகவல் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பயிலகம் (சி.பி.ஆர்.ஐ.டி.) உள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பொதுவாக ஒரு கரண்டி தேன் 3 கரண்டி சர்க்கரைக்கு சமமானது.

நிதின் கட்கரி

தற்போது விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் டீ, காபியுடன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பாக்கெட்டுகளில் அடைத்து கொடுக்கப்படுகிறது. எனவே தேன் பாக்கெட்டுகள் மற்றும் தேன் கட்டிகளை விமானங்கள் மற்றும் ஹோட்டல்களில் வழங்க முடியுமான என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். அதேசமயம் சர்க்கரை அல்லது தேன் எது வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளும் வசதி அங்கு இருக்கும்.

விமானத்தில் பயணிகளுக்கு பானங்களை அளிக்கும் பணிப்பெண்

ஏர் இந்தியா, கோஏர், ஸ்பைஸ்ஜெட்  மற்றும் இண்டிகோ மற்றும் காதி கிராமதோய கமிஷனின் தலைவர்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். விமானங்களில் சர்க்கரை, தேன் இரண்டும் கிடைக்குமாறு அவர்களிடம் கேட்டு கொள்வேன். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் அதன் வருவாயை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் எனது அமைச்சகம் கட்டாயம் வேலை செய்யும். பால், தேன், மூங்கில், நீல பொருளாதாரம், எத்தனால் அல்லது பயோரி எரிபொருள் உள்ளிட்ட அனைத்து துறைகள் வாயிலாக கிராமப்புற பொருளாதாரம் பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.