இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும்: அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்!

 

இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும்: அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்!

சென்னை: இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

water crisis

சென்னையில் இன்னும் கூட பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் என்பது தொடர்கதையாகவே உள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர்.இதனிடையே ‘சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர். இது உண்மையில்லை. மழை பெய்யாதது இயற்கையானது’ என்று கூறி அமைச்சர் வேலுமணி அதிர்ச்சியைக் கிளப்பினார்.

இந்நிலையில் அமைச்சர் வேலுமணி மழைநீர் சேகரிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் அதனால் நமக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் குறித்தும் அனைவரும் அறிந்ததே.சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்? அரசு தொடர்ந்து தன் கடமையைச் செய்து கொண்டுதான் வருகிறது. ஆனால் மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரைச் சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதைக் கருத்தில் கொண்டு தமிழக மக்கள் அனைவரும் வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரைச் சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோமாக’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.