இனி எந்த பயமும் இல்லை! அக்டோபர் 10ம் தேதி முதல் காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு வரலாம்- கவர்னர் சத்ய பால் மாலிக்

 

இனி எந்த பயமும் இல்லை! அக்டோபர் 10ம் தேதி முதல் காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு வரலாம்- கவர்னர் சத்ய பால் மாலிக்

2 மாதங்களுக்கு முன் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் உடனே வெளியேறுமாறு பிறப்பித்த பாதுகாப்பு ஆலோசனை அறிக்கை உத்தரவை தற்போது காஷ்மீர் கவர்னர் திரும்ப பெற்றுள்ளார். மேலும் வரும் 10ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதுடன், அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. அதற்கு 3 நாள் முன்னதாக காஷ்மீர் அரசு நிர்வாகம் திடீரென அமர்யாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தது. 

காஷ்மீர் சுற்றுலா

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால் எவ்வளவு சீக்கிரமாக வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறுமாறு அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதியன்று காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் பாதுகாப்பு ஆலோசனை வழங்கி இருந்தார். இதனையடுத்து சுற்றுலா பயணிகளும், அமர்யாத் பக்தர்களும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறினர். அது முதல் அங்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடும் சரிவு கண்டது. 

காஷ்மீர் சுற்றுலா

தற்போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று  காஷ்மீர் நிலவரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசகர்கள் மற்றும் தலைமை செயலளருடன் கவர்னர் சத்ய பால் மாலிக் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் கடந்த 2 மாதமாக அமலில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு ஆலோசனை அறிவிக்கையை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது. மேலும் வரும் 10ம் தேதி முதல் அது அமலுக்கு வருவதாக காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இனி அங்கு எந்தவித பயமும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் செல்லலாம்.