இனிமேலாவது சிந்தித்து பேசுங்கள் வைகோ: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!

 

இனிமேலாவது சிந்தித்து பேசுங்கள் வைகோ: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!

கடந்த  2009ஆம் ஆண்டு  விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை: தேசத்துரோக வழக்கில் வைகோவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த  2009ஆம் ஆண்டு  விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவை எம்பியாகிறார். 

vaiko

தேசத்துரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதிர்த்து  வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதுகுறித்த அவரது மனுவில், ‘ எனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் தெரிந்த விஷயத்தை வைத்துச் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் எனக்குத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எனக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

hc

இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்துப் பேச வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.  அத்துடன் மேல்முறையீடு மனு தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, ஓராண்டு சிறைத் தண்டனையை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளது.