இனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு! கதையும்… வரலாறும்….

 

இனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு! கதையும்… வரலாறும்….

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்திவருகின்றனர். 

அத்தகையக உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் இயங்குதளமான ஆண்ட்ராய்டை, கூகுள் நிறுவனம் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது வெளியான பதிப்புக்கு ஆண்ட்ராய்டு 1.0 என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு 2009ஆம் ஆண்டு PETIT FOUR 1.1 என்ற பெயரில் இரண்டாவது ஆண்ட்ராய்டு பதிப்பு வெளியானது. அதே ஆண்டில் வெளியான ஆண்ட்ராய்டு 1.5 என்ற பதிப்பில் இருந்துதான், இனிப்பு வகைகளின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை கூகுள் நிறுவனம் கையாண்டது. சீரிய இடைவெளிகளில் வெளிவந்த அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு, சுவையான இனிப்பு வகைகளின் பெயர்களை அகர வரிசைப்படி கூகுள் நிறுவனம் வைத்தது. இதுவரையில், கப் கேக், டோனட், எக்லேர், ஃப்ரோயோ, ஜிஞ்சர்பிரெட், ஹனிகோம்ப், ஐஸ் க்ரீம் சான்ட்விச், ஜெல்லி பீன், கிட்கேட், லாலிபாப், மார்ஷ்மெல்லோ, நவ்கட், ஓரியோ, பை என இனிப்பு வகைகளின் பெயர்களே வைக்கப்பட்டன. இந்த பாரம்பரியமானது ஒவ்வொரு வெளியீட்டின் போதும், இணையதளங்களில் வேடிக்கையாக விமர்சிக்கப்படுவதும் உண்டு.

இந்த நிலையில், கடைசியாக வெளிவந்த ‘பை’ பதிப்புடன் தனது இனிப்பு வகை பெயர்களுக்கு குட்பை சொல்லி இருக்கிறது கூகுள். அடுத்துவரவுள்ள ஆண்ட்ராய்டு க்யூ என்ற பதிப்புக்கு, ஆண்ட்ராய்டு 10 என்று பெயர் சூட்டடியிருக்கிறது கூகுள். இதேபோல்தான் இனி வரும் பதிப்புகள் எண் வரிசையை கொண்டிருக்கும் என்றும் கூகுள் கூறியுள்ளது. பயனாளர்களிடம் குழப்பம் நிலவுவதால் பெயரிடும் பாரம்பரியத்தை முடித்துக் கொள்வதாகவும், இந்த மாற்றத்திற்கு இது சரியான தருணம் என்றும் கூகுள் விளக்கமளித்துள்ளது. பெயர் வைக்கும் வழக்கத்தை மாற்றிய கையோடு, ஆண்ட்ராய்டின் புதிய லோகோவையும் அறிமுகப்படுத்தியுள்ளது.