இந்த வார பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் கருத்து……

 

இந்த வார பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் கருத்து……

அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, ரூபாய் வெளிமதிப்பு போன்றவற்றை பொறுத்து இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆகஸ்ட் மாத நிதிக்கொள்கை கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைத்தது. இதனையடுத்து சில வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைத்தன. ரிசர்வ் வங்கி கடந்த நிதிக்கொள்கை கூட்டம் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து அறிக்கையை வரும் 21ம் தேதி வெளியிடுகிறது. இது பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பங்கு வர்த்தகம்

தொடர்ந்து இந்திய பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப எடுத்து கொண்டிருந்த அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த 3 வர்த்தக தினங்களாக மீண்டும் பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கினர். வரும் நாட்களிலும் அவர்கள் இந்திய பங்குகளில் முதலீட்டை அதிகரித்தால் அது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக அமையும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. வரும் நாட்களில் ரூபாயின் வெளிமதிப்பை பொறுத்து சந்தைகள் வினையாற்றும்.

ரூபாய் வெளிமதிப்பு

மந்த கதியில் இருக்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை  மத்திய அரசு எடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் குறித்த செய்திகள், அமெரிக்காவின் ஆன்லைன் சில்லரை வர்த்தக டேட்டா உள்ளிட்ட இதர சர்வதேச நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.