இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம்….

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம்….

பக்ரீத் மற்றும் சுதந்திர தினத்துக்கு விடுமுறை விடப்பட்டதால் இந்த வாரம் 3 நாட்கள் மட்டுமே பங்கு வர்ததகம் நடந்தது. இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் நீண்ட கொண்டே செல்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தயங்குவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்கு வர்த்தகம் கடுமையாக பாதித்தது.

வர்த்தகம் சரிவு

அதேசமயம் கடந்த ஜூலை மாதத்தில் மொத்த மற்றும் சில்லரை விலை பணவீக்கங்கள் குறைவாக இருந்தது. லேப்டாப் உள்ளிட்ட சீன பொருட்கள் மீதான 10 சதவீத வரி விதிப்பை ஒத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியது போன்ற காரணங்களால் கடந்த புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

பங்கு வர்த்தகம்

இருப்பினும் ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாகத்தான் அமைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு நேற்று வர்த்தகம முடிவடைந்தபோது ரூ.140.73 கோடியாக இருந்தது. கடந்த 9ம் தேதி பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.140.78 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.5 ஆயிரம் கோடியை இழந்தனர்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

இந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 231.58 புள்ளிகள் குறைந்து 37,350.33 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 61.85 புள்ளிகள் சரிந்து 11,047.80 புள்ளிகளில் முடிவுற்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இந்த வாரம் 35 காசுகள் வீழ்ந்து ரூ.71.15ல் நிலை கொண்டது.