இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கும் டிரம்ப் வருகை, கடந்த டிசம்பர் காலாண்டு ஜி.டி.பி……. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கும் டிரம்ப் வருகை, கடந்த டிசம்பர் காலாண்டு ஜி.டி.பி……. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை, கடந்த டிசம்பர் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியாவுக்கு முதல் முறையாக வருகிறார். அவர் வருகையின் போது இரு நாடுகளுக்கு இடையே சில முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமையன்று கடந்த டிசம்பர் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. முந்தைய 2 காலாண்டுகளிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலவரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்

மாதத்தின் கடைசி வியாழன் அன்று பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படுவது வாடிக்கை. அதன்படி வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்றைய தினம் பிப்ரவரி மாத பங்கு முன்பேர கணக்குகள் முடிக்கப்படும். ரியாத்தில் நடைபெற்று வரும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பின் முடிவுகள் நாளை வெளியாகும். வரும் 27ம் தேதியன்று அமெரிக்காவில் அந்நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம், நுகர்வோர் சாதனங்கள் ஆர்டர்கள், வேலைவாய்ப்பின்மை கோரிக்கை, நிலுவையில் உள்ள வீடுகள் விற்பனை உள்ளிட்ட முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளிவருகிறது.

ஜி.டி.பி.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களும் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதவிர, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிலவரம், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.