இந்த வாரம் 4 தினங்கள்தான் பங்கு வர்த்தகம்… எப்படி இருக்கும் வரும் நாட்களில் வர்த்தகம்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

 

இந்த வாரம் 4 தினங்கள்தான் பங்கு வர்த்தகம்… எப்படி இருக்கும் வரும் நாட்களில் வர்த்தகம்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

கொரோனா வைரஸ் பாதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் வாரம் 4 தினங்களில் மட்டுமே வர்த்தகம் நடைபெறும்.  நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் வரும் நாட்களில் பங்கு வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ்

கடந்த மார்ச் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவர உள்ளது. பிப்ரவரி மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் பணவீக்கம் குறைந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வரும் 16ம் தேதியன்று தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவை வெளியிட உள்ளதாக தகவல். 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மற்றொரு நிதி திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.