இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு, அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு வரும் 25ம் தேதி (புதன்கிழமை) விடுமுறை ஆகையால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெறும். மாதத்தின் கடைசி வியாழன் அன்று பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். அதன்படி வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்று டிசம்பர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்குகள் முடிக்கப்படும். இதனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்வர். இது பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அமெரிக்க -சீன வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா-சீனா இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் பங்குச் சந்தைகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன. அதேசமயம் அந்த ஒப்பந்தம் தொடர்பான தெளிவான விஷயங்களை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் நாட்களில் அது தொடர்பான செய்திகள் வெளிவந்தால் அதுவும் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும். இதுதவிர சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் மாற்றம் நடைபெற உள்ளது. இதுவரை 31 நிறுவனங்களை கொண்டு சென்செக்ஸ் கணக்கிடப்பட்டது. நாளை முதல் 30 நிறுவனங்கள் கொண்டு சென்செக்ஸ் கணக்கிடப்பட உள்ளது. இந்த மாற்றம் பங்குகளின் விலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மும்பை பங்குச் சந்தை

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.