இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? வெற்றியை தக்க வைக்குமா காளை?

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? வெற்றியை தக்க வைக்குமா காளை?

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம், வாகன விற்பனை நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெறும். இந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும். ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் இது குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையின் ஏற்ற தாழ்வை முடிவு செய்யும் முக்கிய காரணியாக இருக்கும்.

வாகன விற்பனை

வாகன மற்றும் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் 2019 செப்டம்பர் மாத விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடும். இந்த புள்ளி விவரங்களை பொறுத்தும் பங்குச் சந்தைகள் வினையாற்றும். இது தவிர முக்கிய பி.எம்.ஐ. டேட்டாக்கள் இந்த வாரம் வெளிவர உள்ளது. 

அமெரிக்காவின் வேலையின்மை புள்ளிவிவரம், தொழிற்துறை ஆர்டர், பெடரல் வங்கியின் நிதிநிலை அறிக்கை, அரசியல் சூழல் மற்றும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் தொடர்பான செய்திகள் போன்ற சர்வதேச நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும்.

கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்களும் இந்த பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 சதவீதத்துக்கு மேல் ஏற்றம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.