இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் முன்னறிவிப்பு

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? நிபுணர்கள் முன்னறிவிப்பு

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கூட்டம் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் தாக்கம் நாளை பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும். கடந்த ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் நாளை வெளிவர உள்ளது. வரும் வியாழக்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை உடனடியாக செயல்படுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

நிர்மலா சீதாராமன்

வரும் வெள்ளிக்கிழமையன்று (20ம் தேதி) ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 37வது கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நுகர்பொருள் மற்றும் சில பொருட்களுக்கான வரியை குறைக்கும் என தெரிகிறது. அமெரிக்க மைய வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தல் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான அறிக்கை வரும் 18ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும். அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மைய வங்கி

இந்த வாரம் அமெரிக்காவில் வேலையில்லாதோர் குறித்த புள்ளிவிவரம் உள்பட அந்நாட்டின் முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவருகிறது. இதன் தாக்கம் அந்நாட்டு பங்குச் சந்தைகளில் மட்டுமல்ல சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும். சவுதியின் எண்ணெய் நிறுவனத்தில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் தாக்கல் சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையில் எதிரொலிக்கும்.

இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நிலவரம், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாடு, உள்நாட்டு நிலவரங்கள் ஆகியவற்றை பொறுத்து இந்தவார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கம் இருக்கும் என நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.